தமிழின் டாப் நடிகர்களில் ஒருவர் தனுஷ். அதுமட்டுமல்ல, ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் பாடியது மற்றும் ’ராஞ்சனா’ உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட திரை ஆளுமை ஆகியிருக்கிறார்.
‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ‘ஃபகிர்’ என்னும் ஆங்கிலப் படத்தில் நாயகனாக நடித்து ஹாலிவுட் சென்றார்.
தவிர, ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘விசாரணை’ படத்தை தயாரித்து சர்வதேச கவனத்தையும் பெற்றிருக்கிறார்.
நம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் கம்பீர உடற்கட்டும், வசீகர தோற்றமும் வேண்டும் எனும் தொன்றுதொட்ட மரபை தன் அசாதாரணமான நடிப்பால் மாற்றியமைத்தவர் என்கிற பெருமையும் தனுஷுக்கு உண்டு.
கமர்சியலாக வெற்றி பெற்ற இவர், நடிப்பிலும் சோடை போகவில்லை. வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் துடிப்பு மிக்க மதுரைக்கார இளைஞனாக நடித்ததற்காக முதல் தேசிய விருதைப் பெற்றார் தனுஷ். அப்போது அவருக்கு 30 வயதுகூட ஆகியிருக்கவில்லை. மிக இளம் வயதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர்களில் ஒருவரானார் தனுஷ்.
பவர் பாண்டி படத்தை இயக்கினார்.
இப்படி நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக உருவாகி இருக்கும் தனுஷ் நடித்த முதல் படம் வெளியான நாள் இன்று.
அவர் அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படம் இதே மே 10 அன்று 2002ல் வெளியானது.
இதை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலர் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.