ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றுமுதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வருகிற 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட , அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதனால், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.
கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதுபோல, மதுரையின் சில பகுதி உள்பட பல பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.