திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்குத் தனி சன்னிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாகத் தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போலத் தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது.

தல வரலாறு

மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி எனப் பல பெயர்களும் உள்ளது.

மலையேற உள்ள படிகளில் 60 ஆம் படி மிகச் சிறப்பு வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம்.  கேதார கௌரி, மரகத லிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது.

சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை ‘நளிர்சுரம்’ பற்றி வருத்த ‘அவ்வினைக் கிவ்வினை’ என்னும் பதிகம் பாடி, ‘தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்’ என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணி தீர்த்தார் என்பது

பெரியபுராண வரலாறு.

 

இத்தலத்துச் சொல்லப்படும் ஒரு செய்தி :- இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டு வேலர் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டாராம். பாண்டிப்புலவரேறு என்பவர்; “சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்ப சயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே” – என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடினாராம்; அப்போது, சிறுவனாக வந்த வேலவன் “அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே” – எனப் பாட்டினை முடித்து அப்புலவரைத் திரும்பிப் போகும்படி செய்தார் என்ற செய்தி இம்மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகுமென்று சொல்லப்படுகிறது.

சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம்.

இது அர்த்தநாரி தலம்.

இத்தலம் மலைமீது உள்ளது.

மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை பார்ப்பதற்கு நாகம் போன்றிருப்பதால் நாகாசலம் நாககிரி என்றும் பெயர் உண்டு.

கோயிலுக்குச் செல்ல மலைமீது 1200 படிகள் ஏற வேண்டும். படிக்கட்டுக்களில் பாம்பு உருவங்கள் உள்ளன. ஓரிடத்தில் நீளமான (20 அடி) பாம்பு வடிவத்திலேயே ஏறும் வழி அமைந்துள்ளது.

இத்தலம் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன.

செங்கோட்டு வேலவர் “அழகு மிளிரும்” நின்ற திருவுருவம்

இறைவன் வெள்ளை பாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி. உளி படாதது விடங்கம் – அடியில் சதுரபீடம்.

வேளாளக்கவுண்டர் மண்டபத்தூண் ஒன்றில் வீரபத்திரர் உருவமும், மற்றொன்றில் அர்ச்சுனன் தவக்கோலம், வேடன், குருவிக்காரியின் உருவமும் சிற்பக்கலையழகு நிறைந்தவை.

அர்த்தநாரீஸ்வரர் மூலவர் – நின்ற திருமேனி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை – பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.

திருவடியில் கீழ் குளிர்ந்த நீர் சுரக்கின்றது. இது தேவ தீர்த்தம் எனப்படுகின்றது. இத்தீர்த்தம் நாடொறும் வரும் அன்பர்கட்கு வழங்கப்படுவதைப்போல, அமாவாசை நாள்களில் 3, 4 அண்டாக்களில் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

மூலவர் முன்னால் மரகத லிங்கமும், பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது.

இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.  வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது. இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர்கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

அமைவிடம்

சேலம், ஈரோடு, நாமக்கல் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். ஈரோட்டிலிருந்து 18-கி. மீ. , சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் மற்றும் நாமக்கல்லிலிருந்து 32-கி.மீ. தொலைவில் உள்ளது.

அஞ்சல் முகவரி: அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். அஞ்சல் குறியீட்டு எண்: 637211.