ஸ்ரீ அகோபிலம்.
ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார் { ஸ்ரீ செஞ்சுலக்ஷமித் தாயார்} ஸமேத ஸ்ரீ ப்ரஹலாதவத வரதர் {ஸ்ரீ நவ ந்ருசிம்ஹர்} திருக்கோவில், அகோபில திவ்யதேசம், கர்னூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேச மாநிலம்.
அகோபிலம் திவ்ய தேசம் ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ‘
‘அஹோ’ என்றால் ‘சிங்கம்’. ‘பிலம்’ என்றால் குகை. இது 108 திவ்ய தேசங்களில் 97 வது திவ்ய தேசமாகும்.
திருமங்கை ஆழ்வார் அவர்களால் மங்களாசாசனம் பெற்றது.
போக்குவரத்து வசதி :-
இந்த கோயிலுக்கு ஆலகட்டா (23 கீ.மி.) மற்றும் கடப்பாவில் (70 கி.மீ) இருந்து பேருந்து வசதி உள்ளது.
நந்தியால் மற்றும் கர்னூல் ரயில் நிலையங்கள் அருகில் அமைந்துள்ளன.
சென்னையில் இருந்து வடமேற்காக சுமார் 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஸ்தல புராணம் :-
இது ந்ருசிம்ஹ அவதாரம் நிகழ்ந்த ஸ்தலமாகும்.
இங்கு ப்ரஹலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் ப்ரஹலாத வரதன் எனப்படுகிறார்.
மலைக்கோயிலில் ப்ரஹலாதனுக்காக ந்ருசிம்ஹர் வெளிப்பட்ட உக்ர ஸ்தம்பம் (தூண்) உள்ளது.
திருமாலின் ந்ருசிம்ஹ அவதாரத்தை தர்சிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அஹோபிலத்தில் ஒன்பது ந்ருசிம்ஹ வடிவங்களில் கருடனுக்கு காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த ந்ருசிம்ஹ மூர்த்திகளை பூஜித்து வழிபட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
நவ ந்ருசிம்ஹர் :-
அஹோபிலத்தில் கீழ்க்கண்ட ஒன்பது ந்ருசிம்ஹர் ஆலயங்கள் உள்ளன.
1) பார்கவ ந்ருசிம்ஹர்
2) யோகானந்த ந்ருசிம்ஹர்
3) சக்ரவாஹ நருசிம்ஹர்
4) அஹோபில ந்ருசிம்ஹர்
5) க்ரோதகார (வராஹ) ந்ருசிம்ஹர்
6) கரன்ஜ ந்ருசிம்ஹர்
7) மாலோல ந்ருசிம்ஹர்
8) ஜ்வால ந்ருசிம்ஹர்
9) பாவன நருசிம்ஹர்
முதல் ந்ருசிம்ஹர் மேல் அகோபிலத்தில் உள்ளது. காரஞ்ச ந்ருசிம்ஹர். இவர் சந்திர க்ரஹத்திற்குரியவர்.
இரண்டாவது ந்ருசிம்ஹர் மலையின் மேல் இருக்கும் உக்ர ந்ருசிம்ஹர் ஆவார். இவர் குரு க்ரஹத்திற்குரியவர்.
இவரை வணங்கிவிட்டு அடுத்து நாம் காட்டிற்குள் பயணம் செய்தால் அங்குள்ள, பாவன ந்ருசிம்ஹரை வழிபடலாலாம். இவர் புதன் க்ரஹத்திற்குரியவர்.
தாயார் செஞ்சுலக்ஷமி ஆவார். இங்குதான் பரத்வஜ முனிவர் தவம் செய்தார்.
இங்குச் செல்ல சுமார் 1500 செங்குத்தான படிகளைக் கடந்த பின் சுமார் 7 கிமீ வனத்தில் நடக்க வேண்டும். போக வர 6 மணி நேரம் ஆகின்றது.
இதற்கு ஒரு நாள் ஆகிவிடும்.
செல்லும் வழியில் ஒரு பிரிவு வழி வரும் அதில் சென்றால் செஞ்சுலக்ஷமியை வணங்கலாம்.
இரவு இங்குள்ள மடத்தில் தங்கிக்கொள்ள வேண்டும். அடுத்த நாள் காலை 7 மணிக்கு நம் பயணத்தைத் தொடங்க வேண்டும்.
மீண்டும் உக்கிர ந்ருசிம்ஹர் கோவில் வழியாக இடது புறம் செல்லும் பாதையில் சென்றால் முதலில் வரும் க்ரோட(வராக) ந்ருசிம்ஹரை வணங்க வேண்டும்.
இவர் நவக்கிரகங்களில் ராகு க்ரஹத்திற்குரியவர்.
இங்கிருந்து ஜ்வாலா ந்ருசிம்ஹரை தரிசிக்க 2 மணி நேரம் நடக்க வேண்டும். ஆற்றுப் பாதையில் கொஞ்சம் கடினமாக இருக்கும் பாதையில் செல்ல வேண்டும்.
1 கீமீ சென்றவுடன் படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். அதில் ஏறிச் சென்றோமானால் ஜ்வாலா ந்ருசிம்ஹர் ஆலயம் உள்ளது.
இதுதான் ந்ருசிம்ஹர், இரண்யனை வதம் செய்த இடமாகும். ந்ருசிம்ஹர் அவதார ஸ்தலமாகும்.
இவர் செவ்வாய் க்ரஹத்தை பிரதி பலிக்கின்றார்.
இங்குள்ள உக்கிர ஸ்தம்பத்திலிருந்து தான் ந்ருசிம்ஹர் வெளிப்படுகிறார். இது ஒரு பெரிய தூண் போன்ற குன்றாகும்.
இங்குச் செல்வது கடினம், ஆபத்தானது. பாதை சரியான முறையில் இல்லை.
இங்கிருந்து படி இறங்கி அடுத்த மலையில் ஏறினால் முதலில் வருவது மாலோல ந்ருசிம்ஹர் ஆலயம்.
இங்கு மஹாலக்ஷமியுடன் கோபம் தணிந்த நிலையில் உள்ளார். இவர் சுக்கிரன் க்ரஹத்திற்குரியவர்.
அடுத்து அருகில் உள்ள மலைப் பாதை வழியே அரை கீ.மீ சென்றால் வருவது ப்ரஹலாதன் பாடசாலை. இது ஒரு சிறிய குகை. இதில் குனிந்துதான் உள்ளே செல்லவேண்டும். உள்ளே 3 நபர்கள் உட்காரமுடியும்.
இது தான் ந்ருசிம்ஹர் ப்ரஹலாதனுக்கு வேத அப்பியாசம் செய்வித்த இடமாகும்.
இதை அடுத்து கீழ் அகோபிலம் செல்லும் வழியில் ஒரு ஆட்டோ அல்லது ஏதேனும் வண்டி பிடித்து மீதமுள்ள ந்ருசிம்ஹர்களை தரிசிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் பேருந்துகள் செல்லாது.
3 ந்ருசிம்ஹரையும் தரிசிக்க ரூ 750 வண்டி வாடகை கேட்பார்கள்.
அடுத்த ந்ருசிம்ஹர் வனத்தில் உள்ளார். இவர் பார்கவ ந்ருசிம்ஹர் ஆவார். இவர் க்ரஹங்களில் சூர்யனுக்கானவர்.
தரையிலிருந்து சுமார் 200 படி ஏறிச் செல்லவேண்டும். இங்குள்ள குளம் எந்த காலத்திலும் வற்றுவதில்லை.
அடுத்து சிறிது தூரம் சென்றால் வருவது யோக ந்ருசிம்ஹர். இவர் க்ரஹங்களில் சனி க்ரஹத்திற்கானவர் இங்கு ந்ருசிம்ஹர் கோபம் தணிந்து காணப்படுகிறார்.
இறுதியாக நாம் அடுத்து அருகில் உள்ள சத்ரவட ந்ருசிம்ஹரை தரிசிக்க வேண்டும்.
க்ரஹங்களில் கேது க்ரஹத்திற்கானவர் இவர். இங்கு நவ ந்ருசிம்ஹ நவக்கிரக ஆலயம் உள்ளது.
இங்கு வணங்கினால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரக நவ ந்ருசிம்ஹரை வழிபட்டால் அகோபில நவ ந்ருசிம்ஹரை வணங்கியதற்குச் சமமாகும்.
இவை யாவும் 5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளது.
சிறப்பு நாட்கள் மற்றும் திருவிழாக்கள் :-
ஒவ்வொரு மாதம் ஸ்வாதி நட்சத்திரம் அன்று 9 ந்ருசிம்ஹர்களுக்கும் அபிஷேகம் நடைபெறும்.
ஒவ்வொரு வருஷமும் மாசி மாதம் நடக்கும் பிரம்மோற்சவ தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழா நடக்கும் நாட்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் எம்பெருமானை தரிசிப்பார்கள்.
அகோபில மடம் :-
இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோபன் மஹாதேசிகரால் நிறுவப்பட்டது.
இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைஷ்ணவ மடமாகும்.
இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு.