ராமநாதபுரம்

ந்திய சீன மோதலில் உயிர் இழந்த தமிழக வீரர் பழனி குறித்த கண்ணீர் விவரங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான ராணுவ வீரர் பழனி  உயிர் இழந்துள்ளார்.  அவரது மறைவு ராமநாதபுரம் மாவட்ட மக்களை மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு கடும் சோகத்தை அளித்துள்ளது.   அவரது உறவினரான ஆனந்த் என்பவர் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்னும் சரியான விவரம் இன்னும் தெரியவில்லை எனினும் அவரது தியாகத்தால் தாங்கள் அனைவரும் பெருமை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மறைந்த வீரர் பழனி சுமார் 22 வருடங்களுக்கு முன்பு அதாவது தனது 18 வயதில் ராணுவத்தில் இணைந்து 22 வருடங்களாக நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.  அவரது தாய் லோகாம்பாள் மற்றும் தந்தை காளிமுத்து ஆகியோரின் மூன்று குழந்தைகளில் பழனி முதலாமவர் ஆவார்.   இவரது பெற்றோர் திருவாடனை தாலுக்காவில் உள்ள கடுக்காலூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்,

பழனியின் மனைவி வனிதாதேவி என்னும் 33 வயது பெண்மணி ஒரு தனியார் கல்லூரியில் எழுத்தராகப் பணி புரிகிறார்.  இவர் மகன் பிரசன்னா 6 ஆம்வகுப்பிலும் மகள் திவ்யா 3 ஆம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். கட்னத ஆறு மாதங்களுக்கு முன்பு 15 நாட்கள் விடுப்பில் வந்த பழனி அடிக்கடி தொலைப்பேசியில் பேசி வந்துள்ளார்.  சென்ற வார இறுதியில் அவர் குடும்பத்தினருடன் தொலைப்பேசியில் பேசி உள்ளார்.

பழனியின் தம்பி இதயக்கனி என்பவர் ராஜஸ்தானில் ராணுவ எழுத்தராக பணி புரிந்து வருகிறார்.    அவருக்கு இன்று காலை சுமார் 9 மணிக்குப் பழனியின் மரணச் செய்தி தெரிய வந்துள்ளது.  அதிர்ந்து போன இதயக்கனி உடனடியாக தனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.   பழனியின் உடல் டில்லிக்கு நாளை காலை வரும் எனவும் அன்று இரவு அல்லது வியாழன் காலை அவர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.

மிகவும் மென்மையாகவும் நட்புறவுடனும் பேசும் பழனியை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மிகவும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.  அவர் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துள்ளார்.  தனது கிராமத்தில் பணி இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க  உதவிகள் புரிந்துள்ளார்.  அவர் மறைவு அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.