குண்டடம் கால பைரவர்!
‘காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!’ என்று சொன்னவர் யார்தெரியுமா?
திருமுருக கிருபானந்த வாரியார்.
 
அதற்கு என்ன அர்த்தம்? காசிக்குச் சென்று கால பைரவரைத் தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைத்தான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி காலபைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.
 
யார் இந்த பைரவர்? சிவனின் வீர அம்சம்தான் பைரவர். காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் இவர். காலனாகிய எமனையே நடுங்க வைப்பவர் என்பதால் கால பைரவர் என்ற பெயர் எழுந்தது. அதாவது பைரவரை வணங்குபவருக்கு எமபயம் இல்லை. சிவாலயங்களுக்கும், ஆலயம் அமைந்துள்ள ஊருக்கும் இவர்தான் காவல்காரர். அதனால் க்ஷேத்திர பாலகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. நான்கு வேதங்களே நாய் வடிவில், இவரது வாகனமாக இருக்கிறது.
 
அத்தனை சிறப்பு மிக்க காசி கால பைரவர் எப்படி இந்த குண்டடம் கிராமத்துக்கு வந்தார் என்பது, உங்களுக்கு தெரியுமா? அதேபோல், இது என்ன ஊரின் பெயர் குண்டடம் என்று வித்தியாசமாக இருக்கிறதே? என்று நினைக்கிறீர்களா?
 
இரண்டு கேள்விகளுக்கு விடையைத் தரும் ஆலய வரலாற்றை இப்போது பார்க்கலாமா?
 
அந்தக் காலத்தில் இந்தப் பகுதி அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. அப்போது இதற்கு இந்து வனம் என்று பெயர். இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார்.
 
அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து, ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்துத் துரத்தினான்.
 
அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று, முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லையே என்று தவித்தார் முனிவர்.
 
உடனே காசி விசுவநாதரையும், விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார்.
விடங்கி முனிவரின் பிரார்த்தனை விசுவநாதர் காதில் விழுந்தது. முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும், அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் காசி விசுவநாதர் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார்.
 
நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர். தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன்என்று மகிழ்ந்து, இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து, கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.
 
அப்புறம் என்ன? முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரைத் துரத்த முயன்றான். பார்த்தார் வடுக பைரவர். கோபத்தின் உச்சிக்கே போன அவர், அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரேஅறைதான்! ஒன்றரை லட்சம் டன் வேகம். கீச் கீச் என கத்தியபடி அந்த விநாடியே மாண்டான் சீசகன்.
 
காசி விசுவநாதரால் அனுப்பப்பட்ட பைரவர், மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார்.
 
விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது. இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படும் முன், பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி சின்னதாய் ஆலயம் எழுப்பினார்.