சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மாறி உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 48மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 950 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், அது  வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரை மற்றும் இலங்கை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று காலை தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும். தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து 760 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 950 கி.மீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் அது இலங்கை கடற்பகுதியை அடுத்த 24 மணி நேரத்தில் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காற்றழுத்தம் தமிழ்நாடு கடல் பகுதிக்கு அருகாமையில் வரக்கூடும் என்பதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.