சென்னை: தனது மகளுக்கு எப்படியும் மருத்துவப் படிப்பில்(MBBS) இடம்பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, நீட் தேர்வு மதிப்பெண்ணில் முறைகேடு செய்ததற்காக சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது 47 வயதாகும் பாலச்சந்திரன் என்ற பல் மருத்துவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். முறைகேட்டிற்காக கைது செய்யப்பட்டுள்ள அவர், தற்போது சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனது மகள், நீட் தேர்வில் 610 மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாக, ஒரு மதிப்பெண் பட்டியலை வைத்துக்கொண்டு MBBS கலந்தாய்வுக்கு, தந்தையும் மகளும் வந்திருந்தனர்.

ஆனால், அப்பெண்ணின் பெயர், கலந்தாய்வுக்கான தரவரிசை சார்ட் அல்லது கால் லிஸ்ட் ஆகியவற்றில் இடம்பெறாததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரிக்கவே, பல் மருத்துவரின் மோசடி நினைவிற்கு வந்தது.

விசாரணையில், அப்பெண் வெறும் 27 மதிப்பெண்களை மட்டுமே பெற்றிருப்பதாகவும், அவர்கள் கொண்டுவந்த அழைப்பாணைக் கடிதமும் போலியானது என்றும் தெரியவந்துள்ளது.