டில்லி

நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலின் முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டம் வழக்கம்போல் நடைபெற்று வந்தபோது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர், நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறிக் குதித்தனர். இருவரும் தங்கள் கைகளில் இருந்த வண்ணப் புகைக் குண்டுகளை வீசினர். அதிர்ச்சியில் உறைந்த எம்.பி.க்கள், அவர்களை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அந்த வாலிபர்கள் இருவரும் காவலர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் வெளிப்பகுதியில் பெண் உள்பட 2 பேர், வண்ணப் புகைக் குண்டுகளை வீசினர். அவர்களையும் காவல்துறையினர் பிடித்து 4 பேரையும் டில்லி காவல்துறை வசம், ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும், ‛பகத் சிங் பேன் கிளப்’ என்ற சமூக வலைத்தள பக்கத்துடன் தொடர்புடையவர்கள்.

தாக்குதல் குறித்து டில்லி காவல்துறையினர்,

”இவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மைசூருவில் சந்தித்துத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மீண்டும் சண்டிகர் விமான நிலையம் அருகே சந்தித்து தங்களது திட்டம் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தியிருந்தனர். 

கடந்த ஜூலை மாதம், லக்னோவில் இருந்து டில்லி வந்த சாகர் சர்மா, நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்ல முயன்றுள்ளார். ஆனால், முடியாத காரணத்தினால், வெளியில் இருந்து பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உன்னிப்பாகக் கவனித்து உள்ளனர். 

மீண்டும் கடந்த 10ம் தேதி ஒருவர் பின் ஒருவராக டில்லி வந்தடைந்தனர். அங்கு குழல் வழியே புகையைப் பீய்ச்சியடிக்கும் கருவி அவர்களுக்கு வழங்கப்பட்டது. லக்னோவின் மணக்நகரை சேர்ந்தவர் சாகர் சர்மா. மின்சார ரிக்ஷாவை  வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்துள்ளார். 

இவர் இடதுசாரி கொள்கையால் ஈர்க்கப்பட்டு அது குறித்த பதிவுகளை தனது பேஸ்புக் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ளார். இந்த பக்கம் சில மாதங்களாகச் செயல்படாமல் இருந்தாலும், அதன் மூலம் ராஜஸ்தான், மேற்கு வங்கம்  மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்துள்ளார். 

இவர் மக்களவையில் அத்துமீறிய தகவல் அறிந்ததும், அவரது தந்தை, தாயார் மற்றும் தங்கை வீட்டைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகி உள்ளனர். இவர்கள் உன்னவ் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 20 ஆண்டுகளாக லக்னோவில் வசித்து வருகின்றனர். அவரின் திட்டம் குறித்து குடும்பத்தினர் உட்பட யாருக்கும் தெரியாது என உறவினர்கள் கூறியுள்ளனர். மின்சார ரிக்சாவை வாடகைக்குக் கொடுத்த நபர், சாகர் சர்மா நல்லவர் எனக்கூறியுள்ளார்.” 

என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும் காவல்துறையினர்,

கைதான லலித்

“இந்த சம்பவத்தில் இன்னும் இரண்டு பேரைத் தேடி வருகிறோம். கைதான 4 பேர் மற்றும் தலைமறைவான இருவரும் நாடாளுமன்றத்துக்குள் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், சாகர் சர்மா மனோரஞ்சன் மட்டுமே உள்ளே செல்ல முடிந்தது. இந்த சம்பவத்திற்கு வேறு யாரும் பின்னணியில் உள்ளனரா, மூளையாகச் செயல்பட்டது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.”

என்று கூறி உள்ளனர்.

தற்போது  முக்கிய குற்றவாளியும் திட்டம் வகுத்துத் தந்ததாகப் பீகாரைச் சேர்ந்த லலித்ஜா என்பவர் தலைமறைவானார். இவரை தேடிவந்த காவல்துறையினர் இவரை டில்லியில் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்தான் மக்களவையில் அத்துமீறல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது என்று தெரிய வந்துள்ளதால், காவல்துறையிடம் சிக்கிய லலிதாஜாவை விசாரித்தால் பின்னணி பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.