டில்லி

ஞ்சாப் நடிகர் தீப் சித்து மீது செங்கோட்டைக் கலவரம் தொடர்பாக டில்லி காவல்துறை முதல் குற்றப் பத்திரிகை பதிந்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதையொட்டி கடந்த 26 ஆம் தேதி அன்று அவர்கள் ஒரு டிராக்டர் பேரணி நடத்தி உள்ளனர்.  இதில் நடிகரும் பஞ்சாப் மாநில பயங்கரவாத குழுத் தலைவருமான தீப் சிங் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார்.  ஏற்கனவே இவர் விவசாயிகள் போராட்டத்தில் பங்கு பெற விரும்பிய  போது விவசாயிகள் சங்கத்தினர் இவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை.

கடந்த 26 ஆம் தேதி தீப் சித்து குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே கிளம்பி தனது ஆதரவாளர்களுடன் அனுமதிக்கப்படாத தடத்தில் செங்கோட்டிற்குச் சென்றுள்ளார்.  அங்கு அவர் காலிஸ்தான் கொடியை ஏற்றி உள்ளார்.   இவரது ஆதரவாளர்கள் தங்களைத் தடுத்த காவல்துறையினர் மீது டிராக்டர்களைக் கொண்டு விரட்டி தாக்கி உள்ளனர். இது நாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையொட்டி டில்லி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோத்வாலி காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இந்த வழக்கில் பஞ்சாப் நடிகரும் தீவிரவாதியுமான தீப் சித்து மற்றும் ஆதரவாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.  இதில் அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரைத் தாக்குதல், கொலை செய்ய முயற்சி, கலவரத்தை தடுக்கும் ஊழியர் மீது தாக்குதல், கொள்ளை, பொது இடத்தை சேதப்படுத்தல் உள்ளிட்ட பல சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 6 முதல் 22 வரை பறவைக் காய்ச்சல் தடுப்பு காரணமாகப் பார்வையாளர்களுக்கு செங்கோட்டை அடைக்கப்பட்டிருந்தது.  அதன் பிறகு 26 ஆம் தேதி அங்குக் கலவரம் நடந்துள்ளது.  தற்போது மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 27 முதல் ஜனவரி 31 வரை செங்கோட்டை அடைக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை இந்தியத் தொல்பொருள் துறை அறிவித்துள்ளது.