காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அருந்ததி ராய் மீது வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி கே சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.

புக்கர் பரிசை வென்றவரான எழுத்தாளர் அருந்ததி ராய் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் என்றபோதும் அவரது கருத்துக்கள் பலவும் மோடி அரசுக்கு எதிராக இருப்பதை அடுத்து ஆளும் தரப்பில் இருந்து அவர் மீது தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

2010ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்தியாவில் இருந்து காஷ்மீர் பிரிக்கப்படவேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் அருந்ததி ராய் பேசியிருந்தார்.

இதற்காக டெல்லியில் உள்ள அவரது வீடு அப்போது முற்றுகையிடப்பட்டது தவிர அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு 13 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் இவருடன் குற்றம்சாட்டப்பட்ட சிலர் மரணமும் அடைந்தனர்.

இதனால் அருந்ததி ராய் மீது புதிதாக வழக்கு தொடர டெல்லி துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு நேற்று அவர் ஒப்புதல் அளித்திருப்பதை அடுத்து அருந்ததி ராய் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.