மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா நோக்கி வந்த இரண்டு எண்ணெய் டேங்கர்கள் தங்களின் டிராக்கிங் கருவிகளை அணைத்தபடி அந்த நீரிணையை கடந்து சென்றதாக Moneycontrol செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, மார்ச் 5 முதல் 10 வரை மொத்தம் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு டேங்கர்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி பயணித்துள்ளன.
இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று தென் ஈராகில் உள்ள அல் பஸ்ரா எண்ணெய் துறைமுகத்தில் இருந்து ஏற்றப்பட்டுள்ளது.

மற்றொன்று சவூதி அரேபியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சவூதி அரேபியா தனது மேற்குக் கடற்கரையில் உள்ள யான்பு துறைமுகத்தில் இருந்து அதிகளவில் எண்ணெய் ஏற்றத் தொடங்கியுள்ளது.
சவூதியின் East-West Pipeline மூலம் கச்சா எண்ணெயை மேற்குக் கடற்கரைக்கு கொண்டு சென்று அங்கிருந்து கப்பல்களில் ஏற்றி அனுப்புவதன் மூலம் ஹோர்முஸ் நீரிணையை தவிர்க்க முயற்சி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியா நோக்கி வந்த தாய்லாந்து கொடியுடன் பயணித்த ஒரு சரக்கு கப்பல் ஹோர்முஸ் வழியாக செல்லும் போது தாக்குதலுக்கு உள்ளானது. அந்த தாக்குதலால் கப்பலில் தீப்பிடித்து அவசர மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து எவ்வளவு ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணர்த்துவதாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அரஃஹச்சி உடன் தொலைபேசியில் பேசியுள்ளார். மேற்கு ஆசியா பிரச்சினை தொடங்கியதிலிருந்து இது மூன்றாவது உரையாடல் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் U.S. Energy Information Administration தரவின்படி, 2025 ஆம் ஆண்டில் தினமும் சராசரியாக 2 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் தயாரிப்புகள் ஹோர்முஸ் நீரிணை வழியாக சென்றுள்ளன. இது உலக கடல் வழி எண்ணெய் வர்த்தகத்தின் சுமார் 25% ஆகும்.
ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து எண்ணெய் அனுப்பும் மாற்று வழிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. தற்போது சவூதி அராம்கோ நிறுவனம் இயக்கும் East-West Pipeline தினமும் 50 லட்சம் பீப்பாய் எண்ணெயை Abqaiq பகுதியில் இருந்து யான்பு துறைமுகத்துக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது.
அதேபோல், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் இயக்கும் ஹஃப்ஷன் புஜைரா பைப்லைன் தினமும் 15 லட்சம் பீப்பாய் எண்ணெயை புஜைரா துறைமுகத்துக்கு அனுப்ப முடியும்.
இந்த இரண்டு குழாய்களும் தற்போது முழு திறனில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, தற்போது பெர்ஷிய வளைகுடா பகுதியில் 28 இந்தியக் கொடி கப்பல்கள் இயங்குகின்றன.
இதில் 24 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியில் உள்ளன. மற்ற 4 கப்பல்கள் கிழக்குப் பகுதியில் உள்ளன.
இந்த கப்பல்களில் மொத்தம் 778 இந்திய கடற்படையினர் பணியாற்றி வருகிறார்கள்.
மேற்கு ஆசியா போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செயலிழந்த நிலையில் இருப்பதால், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மாற்று வழிகளின் மூலம் எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளன.
இதற்குமுன், இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெயில் 55% மட்டுமே ஹோர்முஸ் பாதையைத் தவிர்த்து தவிர்ந்த மாற்று வழிகளின் மூலம் வந்த நிலையில், தற்போது அது 75% ஆக உயர்ந்துள்ளது என்று எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.