பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமி புகைப்படம் வெளியீடு….டிவி, பத்திரிக்கைகளுக்கு நோட்டீஸ்

டில்லி:

பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம், அடையாளங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுபப்ப உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச்ச சேர்ந்த 8வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தை டில்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று விசாரணைக்கு எடுத்தது.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி ஹரி சங்கர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பான செய்திகளை டிவி, பத்திரிகைகளிலும் பார்த்தோம். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது மிகவும் துரதிருஷ்டவசமாகும். இது எங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை, அடையாளத்தை, பெயரை வெளியிடக்கூடாது என்பது ஊடகங்களுக்கு தெரியாதா?. இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையும், பெயர்களையும், அடையாளங்களையும் வெளியிடுவது அவர்களின் தனிப்பட்ட, அந்தரங்க உரிமையை மீறும் செயலாகும்.

புகைப்படத்தையும் அடையாளங்களையும் வெளியிட்ட ஊடகங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்பது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

இனிவரும் காலங்களில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் பெயர், புகைப்படம், அடையாளம், அவர்கள் படிக்கும் பள்ளி உள்ளிட்ட எந்தவிவரங்களையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது’’என்றனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: delhi highcourt issues notice to TV and newspapers for flashing photos of rape and murder victim girl, பத்திரிக்கைகளுக்கு நோட்டீஸ், பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமி புகைப்படம் வெளியீடு....டிவி
-=-