தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சுற்றுவட்டார கிராம மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஸ்டெர்லைட் மூட வலியுறுத்தி தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு உள்ளார்.

தூத்துக்குடியில் தற்போது தற்காலிகமாக, ஆலை பராமரிப்பு காரணமாக மூடப்பட்டு இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தம்மை ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா குழுமத்தை சேர்ந்தவர்கள் அணுகினார்கள் என்று கூறி உள்ளார்.

மேலும், அவர்கள் தனது தேர்தல் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகவும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க ஆதரவு கொடுங்கள் என்று வேண்டினார்கள். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன்… என்னால் உதவ முடியாது என்று கூறிவிட்டேன் என்று பகிர் தகவல்களை தெரிவித்து உள்ளார்.

இது ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேன்சர், மூச்சுத்திணறல் சிறுநீரக பிரச்சினை போன்ற பல்வேறு நோய்களை உருவாக்கி வரும் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தாமிர ஆலை யான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதியை 9 கிராமத்தை சேர்ந்த  மக்கள் கடந்த 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய அன்னைப் பேராலயம் முன்பாக இன்று  கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.  தொடர்ந்து பனிமய அன்னை பேராலய வளாகத்திற்குள் பந்தல் அமைத்து மணலில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை தூத்துக்குடி முழுவதும் அனைத்து வீடுகளிலும் கறுப்புக்கொடி  ஏற்றப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம்  காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.