டில்லி

பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் குறித்த தவறான பதிவுகளுக்கு சர்வ தேச அளவில் டில்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த வருடம் வெளி வர இருந்த ”சாமியாரில் இருந்து ஜாம்பவான் வரை” என்னும் புத்தகத்தில் தம்மைப் பற்றி தவறான மற்றும் பெருமையைக் குலைக்கும் வகையில் தகவல்கள் உள்ளதாக யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் வழக்கு தொடர்ந்தார்.   இந்த புத்தகம் குறித்த வீடியோவிலும் தம்மைப் பற்றி தவறான தகவல் உள்ளதாகவும் அவர் வழக்கில் தெரிவித்திருந்தார்.

இதையொட்டி டில்லி உயர்நீதிமன்றம் இந்த  புத்தகத்தில் உள்ள ஆட்சேபகரமான பகுதிகள் நீக்கப்படும் வரை வெளியிடக்கூடாது  எனவும் அந்த வீடியோவை யாரும் பகிரக் கூடாது எனவும் தீர்ப்பு வழங்கியது.   ஆயினும் அந்த வீடியோ முகநூல், கூகுள், யூ டியூப் மற்றும் டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளதாக  டில்லி உயர்நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம் சிங், “யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் குறித்து தவறாகக் குறிப்பிட்டுள்ள இந்த வீடியோ உள்ளிட்ட அனைத்துப் பதிவுகளையும் உடனடியாக நீக்க வேண்டும்.   இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் எடுக்கப்பட்டு இந்தப் பதிவுகளைத் தடை செய்து யாரும் பார்க்க முடியாத வண்ணம் நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.