சென்னை:  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழல்  வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை ஏற்றுள்ள  டெல்லி உயர்நீதிமன்றம், திமுக எம்.பி.க்கள் அ.ராசா, கனிமொழி மீது,  மே மாதம் முதல் விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக மன்மோகன் சிங் தலைமையிலான  அமைச்சரவையில் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக திமுகவை சேர்ந்த  ஆ.ராசா இடம்பெற்றிருந்தார்.  அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது.  இதன் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக ஆ. ராசா மீது மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது.

இந்த வழக்கில்,  திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமொழி உள்பட  முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஆ. ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் முதலீட்டாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் டி. சஞ்சய் சந்திரா மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் மூன்று முக்கிய நிர்வாகிகள் கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் தவறு நடந்ததாகக் கூறி, கடந்த 2012ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஒன்பது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட122 தொலைத் தொடர்பு உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை தொடர்ந்து,  ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த ஊழல் தொடர்பாக, ஆ.ராசா, அவருக்கு உதவியதாக கனிமொழி ஆகியோர், சுமார் ஓராண்டு காலம்  திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்னர். பின்னர் அனைவருமே ஜாமீனில் விடுதலையாகினர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி,  2018 ஆம் ஆண்டு அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனியின் இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்டவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில்,   2ஜி வழக்கு தொடர்பான சிபிஐயின் மேல்முறையீட்டு மனுக்களை ஏற்பதாக அறிவித்த  டெல்லி உயர்நீதிமன்றம், இந்த மனுக்கள் மீதான விசாரணை மே மாதம் முதல் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு இண்டி கூட்டணி மற்றும் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.