புதுடெல்லி: அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு கொண்டுவந்த ஜெய் பீம் முக்யமந்த்ரி பிரதிபா விகாஸ் யோஜனா என்ற திட்டத்தில் பயன்பெற்ற ஒரு ஏழை மாணவர், தற்போது ஐஐடி -யில் இடம் பிடித்துள்ளார்.

இதன்மூலம் தனது மகனும், ஒரு சாதாரண தையல் தொழிலாளியின் மகனும் தேசிய மதிப்புவாய்ந்த ஒரே கல்வி நிறுவனத்தில் படிப்பதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டெல்லி அரசின் இந்த திட்டம், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு, புகழ்பெற்ற பயிற்சி மையங்களின் வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை அளிப்பதற்கு வழிவகை செய்வதாகும்.

இந்த திட்டத்தின் முதல் மாணாக்கர் அணியாக இணைந்த 4953 பேரில், தையல் தொழிலாளியின் மகன் விஜய் குமாரும் ஒருவர். அதில் பயனடைந்த அவர் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சிபெற்று, தற்போது ஐஐடி மாணவர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மகனும், விஜயகுமாருடன் சேர்ந்து ஐஐடி -க்கு தேர்வாகியுள்ளார்.

“ஏழையின் மகன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிலை டெல்லி அரசினுடைய திட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் நாங்கள் அம்பேத்கரின் கனவை நனவாக்கியுள்ளோம்” என்றார் கெஜ்ரிவால்.