டெல்லி:
டெல்லி மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லி மாநில நிர்வாகம் செய்ய துணை நிலை ஆளுனருக்கு தான் அதிகாரம் உள்ளது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
இதன் மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம் சப்ரே ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சில அதிகாரங்கள் இருந்தாக வேண்டும். இல்லை என்றால் அந்த அரசால் செயல்பட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி தீர்ப்பு ஜனவரி 18ம் தேதி வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மனு மீது எவ்வித இடைக்கால உத்தரவை வெளியிட நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
ஆம் ஆத்மி அரசின் வக்கீல் சுப்ரமணியன் கூறுகையில்… டெல்லியில் தலைமை செயலாளரோ அல்லது குரூப் 4 அதிகாரிகளை கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் நியமனம் செய்ய முடியவில்லை. நீதிபதிகள் தற்போது தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்றார். நீதிபதிகளின் இந்த கருத்தின் மூலம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நிம்மதி கிடைக்கும் விஷயமாக இருக்கும்.