டில்லி:

ந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில்  போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இன்று காலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, முப்படை தளபதிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக காஷ்மீர் மாநிலம் உள்பட  இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் தொற்றி உள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் இருபுறமும் இரு நாட்டு படைகளும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்,

அதையடுத்து, ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கடற்படை தளபதி சுனில் லன்பா மற்றும் முப்படைகளை சேர்ந்த உயரதிகாரிகளை சந்தித்து ஆலேசானை நடத்தினார். அவர்களுடன் புலனாய்வு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், எல்லையில் உள்ள நிலவரம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள், முப்படைகளின் ஆயத்த நிலை பற்றி விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கள நிலவரம் குறித்து நேரடிய ஆய்வு செய்ய, பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை காஷ்மீர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.