2வது நாளாக ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை: ஜெ. சமாதியில் ஓபிஎஸ் மீண்டும் தியானமா?

Must read

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் மற்றும் முதல்வர் பதவிக்கான போட்டி காரணமாக, கடந்த இரு நாட்களாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் துணைமுதல்வர் ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தனது காரில் உள்ள அரசு கொடியை அகற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ஜெ.சமாதியில் மவுன விரதம் இருக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதைத் தொடர்ந்து, தனது துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அதிமுக வட்டாரத் தகவல்கள் உலா வருகின்றன.

ஜெ.மறைவுக்கு, அதிமுகவில் இருந்து விலகி தனி ஆவனத்தனம் காட்டிய ஓபிஎஸ், ஜெ.சமாதியில் தியானம் இருந்து, பின்னர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதையடுத்து கட்சி இரண்டாக உடைந்தது. பின்னர்,  பிரதர் மோடி தலையிட்டு, கட்சியை இணைத்து, ஓபிஎஸ்-க்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டு அதிமுக ஆட்சி நீடித்து வருகிறது. இருந்தாலும்,  முதல்வர், துணை முதல்வர் இடையே  சுமூகமான நிலை இல்லை. அவ்வப்போது மோதல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மே மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சி தலைமைகளுக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. ஓபிஎஸ், தான்தான் முதல்வர் வேட்பாளர் என எகிற, எடப்படி தரப்போ, தான்தான் முதல்வர் வேட்பாளர் என உறுதியாக கூற, இரு தரப்புக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக செயற்குழுவில், இந்த மோதல், பூதாகாரமாக எழுந்தது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில், எந்தவொரு முடிவும் எடுக்க முடியாத நிலையில், எடப்பாடிக்கும், ஓபிஎஸ்-க்கும் இடையே நேரடி மோதல், வாக்குவாதம் நடைபெற்றது. இது அதிமுக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த இரு நாட்களாக துணைமுதல்வல்ர ஓபிஎஸ் எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல், தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்றைய  ஆலோசனை கூட்டத்தில்,  கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்பட அவரது ஆதரவாளர்கள்  பலர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், இன்று 2வது நாளாகவும் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்பட பலர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கிடையில்,  சென்னை மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா தீவுத்திடலில் இன்று நடக்கிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பதாக இருந்தது.  இது தொடர்பான தனியார் நிறுவன அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயரும் இருந்தது. ஆனால், மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட புதிய அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயருக்கு பதிலாக, அமைச்சர் பெஞ்சமின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், கட்சி நிர்வாகப் பொறுப்பை தன்னிடம் கொண்டுவரும் முயற்சியில் ஓபிஎஸ் ஈடுபட்டு உள்ளதாகவும்,  ஆனால், எடப்பாடி தரப்பு அதற்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் கூறப்படகிறது. ‘இரு தரப்பினரும் தங்களது நிலைகிள்ல பிடிவாதமாக உள்ளதால், தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் தனது அரசு காரில் உள்ள தேசியகொடியை அகற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜெ.சமாதியில் மீண்டும்  தியானம் மேற்கொள்ளப்போவதாகவும், தர்மயுத்தம் நடத்தப்போவதாகவும், அதைத்தொடர்ந்து, தனது துணைமுதல்வர் பதவி ராஜினாமா குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என அவரது ஆதரவு வட்டாரத் தகவல்கள் பரவி வருகின்றன.

அதிமுகவில், முதல்வர் வேட்பாளர் குறித்து  அக்டோபர் 7ந்தேதி அறிவிக்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், ஓபிஎஸ்-ன் தனி ஆலோசனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவை முடக்க நினைக்கும் பாஜகவும், ஓபிஎஸ் பகடைக்காயாக மாறி இருப்பதாகவும், பாஜக கையாளும் ராஜதந்திரம் இது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

More articles

Latest article