இந்த மாதம் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் – நடைமுறைகள்

இந்த மாதம் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் செய்ய வேண்டிய நடைமுறைகள் இதோ

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் போது சூரியன் பூமியில் இருந்து மறைகிறது.  இந்த நிகழ்வைச் சூரிய கிரகணம் என அழைக்கின்றனர்.   நமது பஞ்சாங்கத்தின் படி சூரிய கிரகணம் ஒரு முக்கிய நிகழ்வாகக் கூறப்படுகிறது.   பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வான சாஸ்திரம் அறிந்திருந்த இந்தியர்கள் இந்த கிரகண தினத்தை துல்லியமாகக் கணித்து வருகின்றனர்.

இந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த சூரிய கிரகணம் 26 ஆம் தேதி காலை 8.09க்கு ஆரம்பித்து காலை 11.20க்கு முடிகிறது.   கிரகண காலத்தில் செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து இங்கு பார்ப்போம்.

கிரகண காலத்தில் பல புறக்கதிர்கள் வீசுவதால் குறிப்பிட்ட நேரத்தில் இருந்து உணவு உட்கொள்ளக்கூடாது என்பது நடைமுறையில் உள்ளது.  இதனால் டிசம்பர் 25 ஆம் தேதி சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு உணவு உண்ணக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வயது முதிர்ந்தோர் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இரவு 1.30 வரை உணவு உட்கொள்ளலாம் என விதிவிலக்கு உள்ளது.

அன்று காலை எழுந்து தலைக்குக் குளித்து காலை செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்ய வேண்டும்.  கிரகணம் பிடித்த உடன் அதாவது காலை 8.09க்கு தலைக்குக் குளித்து விட்டு ஜபம் உள்ளிட்டவற்றை செய்யலாம்.  காலை சுமார் 9.34க்கு மறைந்த முன்னோருக்குத் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

அதன் பிறகு 11.20 வரை மீண்டும் ஜபம் செய்து கிரகணம் முடிந்த பிறகு மீண்டும் தலைக்குக் குளிக்க வேண்டும்.   அதன் பிறகு பூஜை செய்து கடவுளுக்கு படைத்த பிறகு உணவு உட்கொள்ள வேண்டும்.