மிழகத்தின் பிரபலத் தொழிலதிபரும், நகரத்தார் சமூகத்தில் பிரபலமான கோடீஸ்வரருமான  எம்.ஏ.எம்.ராமசாமியின் 5வது நினைவு தினம் இன்று.

ஒரு சிறப்பான, செல்வச்  செழிப்பு மிக்க, பாரம்பரியப் பின்னணியைக் கொண்டவர் எம்.ஏ.எம்.இராமசாமி. 1931 ஆம் ஆண்டில் செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் பிறந்த  இவர், ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேரன் மற்றும் ராஜா முத்தையா செட்டியாரின் மகன் ஆவார். இவர் பி.ஏ. பட்டம் பெற்றவர். விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். குறிப்பாக பல குதிரைப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.  பல பந்தயக் குதிரைகளையும் வைத்திருந்தார்.

2004 முதல் 2010 வரை கர்நாடகாவில் இருந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார். இவர் இந்தியா ஹாக்கி சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கின்றார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் இந்திய ஹாக்கி அணி உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் முறையாக வெற்றிக் கோப்பையை வென்றது.

இவரது பதவிக்காலத்தில்தான் ஹாக்கி அணி ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றது. 2012ல் ‘போர்ப்ஸ்’ வணிகப் பத்திரிக்கை வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலில், இவர் 88வது இடம் பெற்றிருந்தார்.  அந்த காலகட்டத்தில் இவரது குடும்ப சொத்து மதிப்பு 4,300 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரபல வணிக நிறுவனமான செட்டிநாடு குழுமம் ராஜா அண்ணாமலை செட்டியாரால் 1912ல் துவக்கப்பட்டது. அவருக்குப் பின் அவரது மகன் முத்தையா செட்டியாரும், பின்னர் அவரது மகன் என்ற முறையில் நேற்று காலமான எம்.ஏ.எம்.ராமசாமியும் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தனர்.

இக்குழுமத்தின் கீழ் பலதரப்பட்ட வணிகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் 4000 கோடியாக இருக்கும் என்றும், நேரடியாக 5000 பேரும், மறைமுகமாக 25,000 பேரும் இக்குழும நிறுவனங்களில் பணிபுரிகின்றனர் எனத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேலைவாய்ப்பே உருவாக்க முடியாது என்ற நிலையிலும் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த பெருமைக்குரியவர்.  பிற்படுத்தப்பட்ட பகுதியிலே சாமானிய மக்களையும் பட்டதாரி ஆக்கி அழகு பார்த்தவர். சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர். இன்று அவரது நினைவு தினத்தை மலர்களால் நனைக்கிறோம்!