டில்லி,
மிழகத்தில் ‘வார்தா’ புயலால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து பார்வையிட மத்திய குழு  நாளை மறுதினம் ( 28-ம் தேதி) தமிழகம் வர இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை புரட்டி போட்டது வார்தா புயல். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘வார்தா’ புயல் கடந்த 12-ந் தேதி அதிதீவிர புயலாக மாறி சென்னை  மற்றும் அதன்  புறநகர் பகுதிகளை  கடுமையாக தாக்கியது.
ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் மற்றும் மின் வயர்களும் பாதிப்புக்கு உள்ளாகின. இதன் காரணமாக சென்னையில் இரண்டு நாட்கள் மின்சாரம் தடைபட்டிருந்தது. பின்னர் படிப்டிபயாக மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது.
தொடர்ந்து சேதத்தால் ஆங்காங்கே விழுந்துள்ள மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வந்தனர். இன்னும் அகற்றப்பட்டு வருகிறது.
அதுபோல அறுத்து விழுந்த மின் வயர்கள் மற்றும் மின் கம்பங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. சுமார் 80 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயலால் தமிழகம் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும், அதற்கு மத்திய அரசு நிவாரணம் தர வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் டில்லி சென்று பிரதமரை சந்தித்து கோரினார்.
இதைத்தொடர்ந்து தமிழக புயல்  சேத பகுதிகளைப் பார்வையிட 9 பேர் கொண்ட மத்திய குழு நாளை மறுதினம் (28ந்தேதி) சென்னை வருகிறது.
மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையில் வரும் 9 பேர் கொண்ட குழு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கிறது.
இந்த கூட்டத்தில் வருவாய்த் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்துவார்கள். அப்போது புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ படக்காட்சிகள் மூலம் அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள்.
அதைத்தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளையும், சேத விவரங்களையும்   நேரில் சென்று கண்டறிந்து ஆய்வு நடத்த உள்ளது. இந்த ஆய்வு 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய குழு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம்  மாவட்டங்கள் மட்டுமல்லாமல் திருவண்ணா மலை, வேலூர், தர்மபுரி மாவட்டங்களிலும்  புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தும் என தெரிகிறது.
‘வார்தா’ புயல் நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு சார்பில் முதல் கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
மேலும், வார்தாவின் பாதிப்புகளை  சரி செய்ய ரூ.22,573 கோடி வேண்டும் என பிரதமர் மோடியிடம்  நேரில்  வலியுறுத்தினார். மேலும், உடனடி நிவாரண பணிகளுக்காக ரூ.1,000 கோடி உடனடியாக  வழங்க வேண்டுமென்றும் என்று கோரிகை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.