இத்தாலி :

சீனாவில் முதலில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை சீனாவில் 81,165 பேரை பாதித்து, 3236 பேரை பலிவாங்கி இருக்கிறது.

சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும் 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் 2,42,721 பேரை பாதித்துள்ளதோடு 9869 உயிர்களை பலிவாங்கி இருக்கிறது.

தற்போது இந்த உயிர் பலி எண்ணிக்கை சீனாவை விட இத்தாலியில் அதிகரித்து அங்கு இதுவரை 3405 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இத்தாலியில் இதுவரை 41,035 பேரை பாதித்துள்ள இந்த வைரஸ், சீனாவின் மக்கள் தொகை மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் கணக்கிடும் போது சீனாவை விட இத்தாலி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

சீனாவில் இறப்பு விகிதம் 4 விழுக்காடு என்று இருக்கும் நிலையில் இத்தாலியில் இது 8.2 சதவீதமாக இருப்பது ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சமும் கவலையும்கொள்ள வைத்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் மற்றும் பிரான்சில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் சிக்கி தவிக்கும் ஈரானில் அமெரிக்க தயாரிப்பு மருந்து பொருட்கள் கிடைக்க சிக்கல் நீடித்து வரும் நிலையில் அங்கு இதுவரை சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது.

உலகையே புரட்டி போட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்போது, சீனா சற்று மீண்டு வரும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் இந்த பாதிப்பு எப்பொழுது சரியாகும் என்று கவலையுடன் பார்த்துவருகின்றனர்.

அமெரிக்கா அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது நிலைமை எப்பொழுது சீரடையும் என்று கேட்டதற்கு, “பதினான்கு நாட்கள் கழித்துதான் எதையும் உறுதியாக சொல்லமுடியும்” என்று பதிலளித்தார்.

இந்நிலையில், சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நேற்று தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் ரஷ்ய அதிபர் புடின். அப்போது கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க உலக நாடுகளுக்கு உதவி செய்ய சீனா தயாராக இருப்பதாக கூறியதாக சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .