போபால்:

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை விதிக்கும் வகையில் பொது பாதுகாப்பு மசோதாவை மத்திய பிரதேச மாநில அரசு கொண்டு வந்தது. இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில் “ அப்பாவி சிறுவர்களுக்கு எதிராக கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை விதிக்கும் வகையில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்படும்’’ என்று இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கூட்டு பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை அதிகரிப்பு செய்யும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.