நாம் பயணத்தில் பார்க்கும் குழந்தைகளில் அநேகருக்கு டயப்பர் அணிவித்திருப்பார்கள். அடிக்கடி ஆடையை மாற்ற வேண்டாம் எனும் வசதிக்காக இதைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இது சரிதானா என்ற கேள்வி வருவதைத் தவிர்க்க முடியாது.
குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவதில் உள்ள பாதக விஷயங்களையும் தவிர்க்க முடியாதவர்களுக்கான பயன்படுத்தும் முறைப் பற்றியும் விவரிக்கிறார் குழந்தை நல மருத்துவர் பிரேம் குமார்.
daper
டயப்பரின் கேடுகள்:
இறுக்கமான டயப்பரை அணிவதால், குழந்தைகளின் உடலுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காது. குழந்தைகளின் சிறுநீர், நீண்ட நேரம் டயப்பரிலேயே இருப்பதால், அதில் இருக்கும் பாக்டீரியாக்கள், குழந்தைகளுக்கு வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். மேலும், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படவும் இதுவே காரணம். இந்த எரிச்சலின் காரணமாக குழந்தைகள் சாப்பிட மறுக்கும்.
டயப்பரில் சிறுநீரை உறிஞ்ச, சோடியம் பாலி அக்ரிலேட் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. கூடவே, நறுமணத்துக்காகவும் சில வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம். கால் இடுக்குகளில் அலர்ஜி ஏற்படுவதற்கு இதுதான் முக்கியக் காரணம்.
டயப்பரை  4 மணிநேரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக மாற்ற வேண்டும். ஆனால் சில பெற்றோர்கள், குழந்தைகள் அதில் மலம் கழித்ததுகூடத் தெரியாமல், அப்படியே வைத்திருப்பார்கள். இதனால் குழந்தைகள் எளிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி விடுகிறார்கள்.
இந்தக் கிருமித்தொற்றைத் தடுக்க, சில டயப்பர்களில், ஆன்டிசெப்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதுவும், குழந்தைகளின் மென்மையான சருமத்தை பதம்பார்த்துவிடும்.
24 மணி நேரமும், டயப்பரிலேயே சிறுநீர் கழிக்கும் குழந்தைகளால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னரும், சிறுநீர் வருவதை பெற்றோருக்கு உணர்த்த தெரியாது.
டயப்பர் போட்டிருப்பதாக எண்ணி, இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீரை அடக்குவது என்கிற இரண்டு தவறுகளைச் செய்யத் தொடங்குவார்கள். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இந்தப் பிரச்னைகளால், குழந்தைகள் பள்ளியில், பொது இடங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாவதால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
cloth-diaper-benefits-in-hindi-1
டயப்பர் பயன்படுத்தும் முறை:
டயப்பர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிக்க முடியாமல் பயன்படுத்துபவர்கள் கீழ்காணும் சிலவற்றை அவசியம் பின்பற்றுங்கள்.
* குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம். டாய்லெட்களைப் பயன்படுத்த குழந்தைகளை 2 வயதில் இருந்தே பழக்கபடுத்துவது சிறந்தது.
* வெளியூர்களுக்குச் செல்லும்போது, குழந்தையை வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்தவேண்டும்.
* ஒருநாள் முழுவதும் டயப்பர் பயன்படுத்துவதைத் தவிர்த்து இரவு நேரங்களில் மட்டும் டயப்பரைப் பயன்படுத்தலாம்.
* ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை குழந்தை சீறுநீர் கழிக்கவில்லை என்று சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே டயப்பரை பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
* டயப்பர் பயன்படுத்துவதில் முக்கியமான விஷயம், அதைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது. குழந்தைகள் புழங்கும் இடங்களில் அப்படி, அப்படியே கழற்றி வீசுவது, அவர்களுக்கே சுகாதாரமானதல்ல.