காந்தி நகர்:
குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 4 தலித் வாலிபர்கள் கடுமையாக தாக்கப்பட்டதுடன் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்திலுள்ள சமடியாரா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. சம்பவத்தன்று, இப்பகுதியில் வசிக்கும் தோல் வியாபாரி ஒருவரின் மாடு இறந்து போனதையடுத்து அதனை தூக்கி செல்ல தலித் வாலிபர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு வந்து கொண்டிருந்த வாலிபர்களை, அருகில் உள்ள உனா பஸ் ஸ்டாண்டு அருகே கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியுள்ளது.
a
அதனை தொடர்ந்து, அந்த தலித் வாலிபர்களை அரை நிர்வாணமாக ஆக்கி, சங்கிலியால் அந்த கும்பல் கட்டியுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் வைத்தே தலித் வாலிபர்களை கம்பியால் தாக்க துவங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, மக்கள் பலரும் திரண்ட போதும், அவர்கள் யாரும் தலித் வாலிபர்களை மீட்க முன்வரவில்லை.
இதனிடையே, வாலிபர்களை தாக்கியவர்கள் தாங்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் எனவும், பசு பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தலித்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், வாலிபர்களை தாக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டதாகவும் அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
குஜராத்தில் கடந்த வாரம், இது போன்றதொரு சம்பவம் காந்தி பிறந்த போர்பந்தரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.