டெல்லி: வர்த்தக தலைநகரான மும்பையில் நாளை நிசார்கா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத் மாநில கடற்கரைகளை நோக்கிச் செல்லும் நிசார்கா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, நாளை மும்பை அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1882ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவின் வர்த்த நகரான மும்பையை பாதிக்கும் முதல் தீவிர புயல் இதுவாகும்.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: அடுத்த 24 மணி நேரத்தில் நிசார்கா தீவிர புயலாக வலுவடையக் கூடும். மகாராஷ்டிராவின் கடலோர பகுதியாக அலிபாக் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய பகுதிகள், குறிப்பாக மும்பை, பால்கர், தானே, ராய்காட்,துலே, நந்துர்பர்க, நாசிக் ஆகிய பகுதிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மகாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. கிழக்கு, மத்திய அரபிக்கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

வானிலை மைய அறிவிப்பை அடுத்து மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மும்பை நகரத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.