சென்னை: 2023ம் ஆண்டு டிசம்பர் முதல்வாரத்தில் சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக, பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையான ரூ.6000 இதுவரை 23.18 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தது.  குறிப்பாக சென்னையில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களை வழங்கினர். வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் வெள்ள நீர் வடிகால் அமைக்க திமுக அரசு கடந்த இரண்டு வருடங்களாகல்  செலவழித்த ரூ.400 கோடி செலவில் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறியது. ஆனால், மீண்டும் மழை வெள்ளத்தில் சென்னை மிதந்ததால், ரூ.400 கோடி என்னாச்சு என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் மிக்ஜாம்’ புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர்  த 9-ம் தேதி அறிவித்தார். அதன்படி வெள்ள நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும், செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வட்டங்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இது வரையில் 92% பேருக்கு ₹6000 நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நிவாரண நிதிக்காக இதுவரையில் 5.67 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி, மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட  தகுதியான 24.25 லட்சம் குடும்பங்களில் 23.18 லட்சம் குடும்பங்களுக்கு தலா ₹6,000 வீதம் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது  டிசம்பர் 17, 2023 மற்றும் ஜன. 4, 2024 வரை இந்த நிவாரணத் தொமைக  வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.