சென்னை: சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டி வருவதால், இன்று சென்னை புத்தக்காட்சிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர் மழை இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடரும் காரணத்தால் இந்த மழை பதிவாகி வருகிறது.

காலை 10 மணி வரை 29 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராணிபேட், வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக,  செங்கல்பட்டு, திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி, வேதாரண்யம்  உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, புத்தக்காட்சி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரங்கங்கள் மழைநீரால் மிதந்தன. ஏராளமான புத்தங்களும் மழைநீரில் நனைந்து வீணாகின. இதையடுத்து, புத்தக விற்பனையாளர்கள் புத்தங்களை பத்திரப்படுத்தி வருகின்றனர். மேலும் கண்காட்சி பகுதியில் மழைநீர் சூழ்ந்து உள்ளது.

இதையடுத்து,  47 ஆவது சென்னை புத்தகக் காட்சிக்கு இன்று (ஜன.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று 08/01/2024 ஒரு நாள் மட்டும் புத்தகக் காட்சிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும் என பபாசி தலைவர்/ செயலாளர் தெரிவித்துள்ளார்.