சைபர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் உ.பி. மாநிலம் தியோகரைச் சேர்ந்த 4 பேரை சமீபத்தில் கைது செய்துள்ளனர்.

பண மோசடி மூலம் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பெறப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறி சாமானியர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் இந்த கும்பலிடம் இருந்து செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாமானியர்களை குறிவைத்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச காவல்துறை, சிபிஐ, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், வங்கி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள், ஆர்.பி.ஐ. அதிகாரிகள் என சட்டத்தை அமல்படுத்தும் முகவர்கள் போல ஆள்மாறாட்டம் செய்து அவர்களிடம் இருந்து பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

“உங்களது ஆதார் கார்ட் உள்ளிட்ட விவரங்களைப் பயன்படுத்தி வங்கி மூலம் பணமோசடி செய்துள்ளீர்கள்” என்று மிரட்டும் இந்த கும்பல், “நீங்கள் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்யப்பட்டுள்ளீர்கள், ஆகையால் வீடியோ காலில் விசாரணைக்கு வர வேண்டும்” என்று இந்த கும்பல் உத்தரவிடுகின்றனர்.

பின்னர், வீடியோ காலில் வரும் நபர் முன் காவல் துறை அதிகாரிகள் அல்லது தாங்கள் ஏற்றிருக்கும் வேடத்துக்கு தகுந்தது போல் உடை அணிந்து ஏமாற்றும் இந்த கும்பல் இதுவரை பலரை மிரட்டி பலகோடி ரூபாய் பணம் பறித்துள்ளது தெரியவந்துள்ளது.

இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வரும் நிலையில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து இந்த போலி காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள காவல்துறை அதிகாரிகள், சட்டத்தில் டிஜிட்டல் கைது என்று எதுவும் இல்லை. நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டதாக யாராவது சொன்னால், உடனடியாக சைபர் கிரைம் பிரிவு அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் என்று பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

 

5 கோடி ரூபாய் கேட்டு ரயில்வே பொறியாளரை சிறைபிடித்த மோசடி கும்பல்… தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்…