ராகேஸ் அஸ்தனாவை காப்பாற்ற முயன்றதா மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்?: ‘தி வயர்’ இணையதளம் வெளியிட்ட பிரத்யேக செய்தி

புதுடெல்லி:

சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக வருடாந்திர ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுமாறு, சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவிடம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி நிர்பந்தித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து ‘தி வயர்’ இணையம் வெளியிட்ட பிரத்யே செய்தியின் விவரம் வருமாறு;

அலோக் வர்மா மீதான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக்கை உச்சநீதிமன்றம் நியமித்தது. இவரது மேற்பார்வையில், விசாரணை நடந்தது.

அப்போது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி, டெல்லியில் உள்ள வர்மாவின் வீட்டுக்குச் சென்று, “ராகேஷ் அஸ்தானா மீது வருடாந்திர ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுங்கள். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் சரியாகிவிடும்”என்று கூறியிருக்கிறார்.

சவுத்ரி தன்னுடன் நடத்திய சந்திப்பின் முழு விவரத்தை நீதிபதி பட்நாயக்கிடம் அலோக் வர்மா எழுத்துப் பூர்வமாக கொடுத்திருந்தார். அலோக் வர்மாவுக்கும், அஸ்தானாவுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தில் இருந்தபோது, இந்த சந்திப்பு நடந்துள்ளது.

அஸ்தானாவை பாதுகாப்பதற்காக பிரதமர் அலுவலக உயர் அதிகாரியும், நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருமான பாஸ்கர் குல்பேயும் அலோக் வர்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

விசாரணை அறிக்கையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தபோது, அஸ்தானாவுக்கு ஆதரவாக சவுத்ரி செயல்படுவதாக வர்மா சுமத்திய குற்றச்சாட்டை மறுக்கவில்லை.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் பிரதமர் மோடி தலைமையிலான உயர் மட்டக்குழு, சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்கியுள்ளது.

இவ்வாறு நீதிபதி பட்நாயக்கை வட்டாரத்தை மேற்கோள்காட்டி ‘தி வயர்’ இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ஆணையர் சவுத்ரி சந்திப்பு, நீதிபதி பட்நாயக் மேற்பார்வை
-=-