சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில், இன்று கொரோனா தொற்று பரவல், தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என  கோட்டை  வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு நீடிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மருத்துவ குழுவினர், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு விவகாரம், தடுப்பூசி அதிகப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொற்று பரவலை கட்டுப்படுத்து வது மே 24 முதல் ஒரு வாரம்  தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலன் கிடைத்துள்ளதா, மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா? என அதிகாரிகளிடம் கருத்துக்கேட்பு. மளிகை மற்றும் காய்கறி கடைக்கு மட்டும் அனுமதி தரலாமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரடங்கால் தொற்று எண்ணிக்கை   சென்னை உள்பட சில பகுதிகளில் குறைந்து வரும் நிலையில், கோவை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளில் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய  மருத்துவ நிபுணர்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என  கோட்டை  வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.