சென்னை: கொரோன தடுப்பு தடுப்பூசியான ரஷியாவின் ஸ்புட்னிக்  தடுப்பூசி ஜூன் 2வது வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என பிரபல தனியார் மருத்துவமனையான  அப்போலோ மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து,  ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் செய்து கொண்டபடி, இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள  பனேசியா நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் ஸ்புட்னிக்-வி மருந்து தயார் செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது.

பனேசியா பயோடெக் நிறுவனத்தில் அதன் உற்பத்தியை மே 24ந்தேதி அன்று தொடங்கி இருப்பதாக அறிவித்தது. இதுதொடர்பான வெளியிடப்பட்ட அறிக்கையில்,  பனேசியா பயோடெக் நிறுவனத்தில் உற்பத்தி தொடங்கியது. முதல் தொகுப்பு தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், மருந்தின் தரத்தை ஆய்வு செய்ய மாஸ்கோவில் உள்ள கமலேயா மையத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கோடை காலத்தில் முழு அளவிலான தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தது.

இதற்கிடையில், ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.  விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  பிரபல தனியார் மருத்துவமனையான அப்போலோ நிர்வாகம், பயனர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்த தயாராகி வருகிறது.  ஜூன் 2வது வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.