சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்லூரி படிப்புக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி மத்தியஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய கல்வி வாரியமான யுஜிசி, உயர்கல்வியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்லூரி படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு பிளஸ்2 தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது என்றும், கவுன்சிலிங் போன்றவை கிடையாது, தேர்வில் பெறும் மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ளது.  மத்தியஅரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதன் தாக்கல் எதிரொலித்தது.  இதனால் மாநில மொழிகளில் மேல்நிலை படித்துவரும் மாணாக்கர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் கல்லூரி படிப்பைபடிக்கும் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்தியஅரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தேசியக் கல்விக்கொள்கையின் ஒரு அம்சமான ஒற்றை நுழைவுத் தேர்வு என்பது அனைவருக்கும் சமவாய்ப்பை வழங்குவதாக இருக்காது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு என்சிஇஆர்டி கல்வி முறையின் கீழ் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு, மாநிலக் கல்வி முறையில் பயின்ற மாணவர்களை பெருமளவு பாதிக்கும்.

இதனால் டெல்லி பல்கலை., ஜேஎன்யு உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. சமூக, பொருளாதார வேலைவாய்ப்பில் சமமற்ற வளர்ச்சி உள்ள ஒரு நாட்டில், பொது நுழைவுத் தேர்வு என்பது சமமான வாய்ப்பை வழங்காது. அதுமட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களுக்கு பட்டப்படிப்பில் நுழைவுத் தேர்வு நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது. எனவே, தமிழக மாணவர்களின் உயர்கல்வி பெறும் உரிமையை பாதிக்கும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.