சென்னை

சொமட்டோ நிறுவனத்தின் 10 நிமிட உணவு டெலிவரி விளம்பரம் குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறையினர் விளக்கம் கேட்டுள்ளனர்.

தற்போது உணவு விடுதிகளுக்குச் சென்று உணவு சாப்பிடும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.   பலரும் உணவு டெலிவரி செய்யும் சொமட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவன சேவைகளை பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.  எனவே மக்களைக் கவர இந்நிறுவனங்கள் பல அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களில் பணி புரியும் டெலிவரி பாய்கள் குறிதத நேரத்தில் வாடிக்கையாளரிடம் சென்றடைய வேண்டும் என்பதால் தங்கள் வாகனங்களை கண்மூடித்தனமான வேகத்தில் செலுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.   இதையொட்டி பலமுறை இவர்களுக்கு காவல்துறையினர் வேகத்தை குறைக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் சொமட்டோ நிறுவனம் சமீபத்தில் தனது விளம்பரத்தில் ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   இது குறித்து சமூக வலை தளத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் இந்த விளம்பரம் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் சொமட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர்.