திருவனந்தபுரம்

பிரபல மலையாள  நடிகை பலாத்கார வழக்கில் தமக்கு எதிராக காவல்துறை சதி செய்வதாக நடிகர் திலிப் கூறி உள்ளார்.

மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலிப் கைது செய்யப்பட்டார்.  தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளார்.  இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  விசாரணையைப் பிப்ரவரிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அவர் உள்பட சிலர் அந்த காட்சிகளைப் பார்த்தது தனக்குத் தெரியும் என்று நடிகர் திலீப்பின் நண்பரும், இயக்குநருமான பாலச்சந்திரன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்ட நடிகை, சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் கொடுத்திருந்தார்.   இந்நிலையில் நடிகர் திலீப், கேரள டிஜிபி அனில் காந்திடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், ”நடிகை பலாத்கார வழக்கில் என்னைச் சிக்க வைக்க காவல்துறை முயல்கிறது. தற்போது பாலச்சந்திரன் கூறியதாக வெளியான தகவலின் பின்னணியில் காவல்துறையினர் தான் உள்ளனர். எனக்கு இதன் மூலம் எனக்கு எதிராக காவல்துறை சதி வேலை செய்வதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜு பவுலோஸ்தான் இதன் பின்னணியில் செயல்பட்டுள்ளார். ஆகவே அவரது போன் அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் விவரங்களைப் பரிசோதிக்க வேண்டும்.  அவரை உடனடியாக இந்த வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.