டில்லி

பெண் கிரிக்கெட் வீராங்கனை டிவிட்டரில் தனது புகைப்படத்தை கிண்டல் செய்த ஒருவருக்கு சமயோசிதமாக பதில் அளித்து பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

சமீபத்தில் ஒரு கிரிக்கட் அகாடமியின் ஆரம்ப விழாவில் கலந்துக் கொண்ட மிதாலி ராஜ் தனது சக கிரிக்கெட் வீராங்கனைகளான மமதா மாபென், நூசின் அல் காதிர், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  அதை தனது டிவிட்டர் பக்கத்தில் ”இன்று ஒரு அருமையான நாள், இது போன்ற சாதனைப் பெண்களுடன் நானும் நிற்கிறேன்” என பதிந்தார்.  அந்த படத்தில் மிதாலி ராஜின் அக்குளில் இருந்து வந்த வியர்வையால் அவர் உடை நனைந்து இருப்பது போல் உள்ளது.

அதற்கு பின்னூட்டமாக ஆஷிம் தாஸ் சவுத்ரி என்பவர், ”ஹ ஹ ஹ திருமதி கேப்டன்.  வியர்வையில் நனைந்து பார்க்க சகிக்கவில்லை” என குறும்பாக பதிந்தார்.   இது அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியது.  இதற்கு அவரின் ரசிகர்கள் பலரும் பதில் அளித்தனர்.

ஆனால் மிதாலி ராஜ் தனது கோபத்தை தெரிவிக்காமல், “நான் இன்று இந்த இடத்தை அடைந்ததே வியர்வை சிந்தித்தான்.  கிரிக்கெட் அகாடமி ஆரம்ப விழாவில் மைதானத்தில் நிற்கும் போது வியர்ப்பதற்காக நான் அவமானப்பட மாட்டேன்” என பதில் அளித்துள்ளார்.

மிதாலியின் இந்த பதிலை பலரும் பாராட்டி பின்னூட்டம் அளித்துள்ளனர்.  மிதாலி கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் இன்றி டிவிட்டர் பதிவிலும் ஏற்கனவே புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.