ஐதராபாத்:

ஐதராபாத் மாரத்தான் போட்டியில் 42 கி.மீ., தூரத்தை ஓடி 44 வயது ஜெயந்தி சம்பத்குமார் என்ற பெண் சாதனை படைத்துள்ளார். கைத்தறி ஆடைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலை, செருப்பு அணிந்து அவர் இந்த ஓட்டத்தில் கலந்துகொண்டு இலக்கை அடைந்துள்ளார்.

இவரோடு சேர்த்து மொத்தம் 20 ஆயிரம் பேர் இந்த தூரத்தை கடந்துள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ கைத்தறி ஆடைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பெண்களை ஊக்குவிக்கவும் இந்த போட்டியில் கலந்துகொண்டேன். நான் சைக்கிள் ஓட்டுபவள்.

எப்போதும் சைக்கிளில் தான் செல்வேன். நம்மை சுற்றி பிளாஸ்டிக் மாசு அதிகளவில் உள்ளது. அதனால் மக்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிகை கொண்டு தயாரிக்கப்பட்ட சேலையை அணிந்து இதில் கலந்துகொண்டேன்’’ என்றார்.

இவரது செயல்பாடு அனைத்து பெண்களுக்கும் ஒரு தாக்கமாக அமைந்துள்ளது. சேலை அணிவது சவுகர்யமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். மாரத்தான் போட்டியில் வெறும் காலுடன் கலந்துகொள்ள முடிவு செய்தேன். ஆனால் கற்கள் குத்தியதால் செருப்பு அணிந்து கலந்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் 27 வயதாகும் உதய் பாஸ்கர் தண்டமுதி என்பவர் வேஷ்டி அணிந்து இந்த போட்டியில் கலந்துகெண்டார். இவர் ஜெயந்தியுடன் நட்பு ரீதியில் கலந்துகொண்டு ஓடினார். இருவரும் ஏற்கனவே சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அறிமுகம் ஆனவர்கள்.

பாஸ்கர் 5 மணி நேரம் 15 நிமிடங்களில் இந்த தூரத்தை கடந்தார். அவர் கூறுகையில்,‘‘ வேஷ்டி அணிந்து ஓடியது சவுகர்யமாக இருந்தது. காற்று அடிக்கும் போது மட்டும் அது பலூன் போல் ஊதிக் கொண்டது இடையூறாக இருந்தது’’ என்றார்.

சேலை அணிந்து வேகமாக இலக்கை அடைந்ததற்கான பட்டம் ஜெயந்திக்கு வழங்கப்பட்டது. அடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற ஜெயந்தி முடிவு செய்துள்ளார்.

இவர்கள் அளிக்கும் சான்றிதழ் அடிப்படையில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். எனது சைக்கிள் பயிற்சியாளர் தான் இந்த தூரத்தை 5 மணி நேரத்தில் கடக்க ஆலோசனை வழங்கினார் என்று தெரிவித்துள்ளார்.