கிரிக்கெட்.. தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்…
தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (வயது 81) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.
1999-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக ஐபிசி தமிழ் வானொலிக்காக பயணியாற்றிய ஜப்பார்,  2004-ம் ஆண்டு லண்டனில் உலகக் கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்தார்.
பின்னர், 2007-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை தமிழில் வர்ணனை செய்தார்.

மொத்தம் 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக சிறப்பாகச் செயல்பட்டு உலகத் தமிழரின் நன்மதிப்பைப் பெற்றவர் அப்துல் ஜப்பார்.

பொங்கல்.. சேப்பாக்கம்.. கிரிக்கெட்.. தமிழ் வர்ணனை.

1970கள் 80கள் அவ்வளவு இனிமையானவை.
வருடம் தவறாமல் பொங்கல் பண்டிகையின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி வைப்பார்கள்..
ரேடியோவில் தமிழ் வர்ணனை தமிழகம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கும்.. பாக்கெட் டிரான்ஸிஸ்டர் விற்பனை திடீரென சூடுபிடித்து தெருவில் போவோர் வருவோர் எல்லாம் தமிழில் கிரிக்கெட் வர்ணனை கேட்டுக் கொண்டபடியே செல்வார்கள்..
நான் டிவியை இரவலாக பார்க்கும் வீடுகளில் டிவியை ஓடவிட்டு சவுண்ட்டை மியூட் செய்துவிடுவார்கள். பதிலுக்கு ரேடியோவில் தமிழ் கமென்ட்ரி வைத்துவிடுவார்கள்.. அதெல்லாம் மிகவும் இனிமையான அனுபவம்..
“சற்றே அளவு குறைவாக வீசப்பட்ட பந்து.. பேட்ஸ்மேன் கவாஸ்கர் முன்னே வந்து அடித்து ஆடாமல் சற்று பின்வாங்கி காலைப் பின் வைத்து அதை டீப் லெக் ஸ்கொயரில் அழகாக திருப்பி விடுகிறார். பந்துஎல்லைக் கோட்டை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது இருவர் துரத்துகிறார்கள்.. ஆனால் அவர்களுக்கு முன் பந்து எல்லைக் கோட்டை கடந்து விட்டது.. ஆம் 4 ரன்கள்.. இந்தியாவுக்கு மேலும் 4 ரன்கள்….”
கோடிக்கணக்கானோரை ஒரே நேரத்தில் குதூகலப்படுத்திய அந்த குரல்….
மறக்கமுடியாத வர்ணனையாளர் எண்பத்தொரு வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகிவிட்டார் அப்துல் ஜப்பார்.. ஆழ்ந்த இரங்கல்கள்..
-ஏழுமலை வெங்கடேசன்