“மே.வங்காளத்தில் பா.ஜ.க. வளர்ச்சியை தடுப்பதற்காக காங்கிரசுடன் கூட்டணி” – சீதாராம் எச்சூரி தகவல்

Must read

 

கொல்கத்தா :

மே.வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்தனர்.

டெல்லியில் அண்மையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில், மே.வங்கத்தில் காங்கிரசுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என்ற மாநில குழுவின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது..

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி அளித்துள்ள பேட்டியில் “மே.வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

“இதனை பயன்படுத்தி கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. அந்த மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது” என்று குறிப்பிட்ட எச்சூரி “சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை பா.ஜ.க. அறுவடை செய்து விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி வைத்துள்ளது” என்றார்.

“இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது தான் தங்கள் நோக்கம்” என்று குறிப்பிட்ட எச்சூரி “எனினும் மே. வங்க மாநிலத்துக்கு பா.ஜ.க,வை அழைத்து வந்த திரினாமூல் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்தே தோற்கடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

– பா.பாரதி

More articles

Latest article