லக்னோ,

உத்தரபிரதேசத்தில் இறைச்சிகடைகளை விஷமிகள் தீவைத்ததால் பல லட்சம் ரூபாய் இழப்பு. உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெளிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் பசுமாடு கொல்லப்படுவது தடைசெய்யப்படும் என்றும் அனுமதியின்றி நடத்தப்படும் மாட்டிறைச்சிக்கடைகளும்,  ஆட்டிறைச்சி மற்றும் மீன் கடைகள்  மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக அதிகாரத்துக்கு வந்து சிலதினங்களே ஆன நிலையில் நேற்றிரவு ஹத்ராஸ் என்ற இடத்தில் மூன்று இறைச்சிகடைகள் மற்றும் மீன் கடைகளுக்கு சிலர் தீவைத்துக் கொளுத்தினர். இதனால் கடை உரிமையாளர்களுக்கு பல லட்சம் ரூபாய்  இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்தப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்டக் கண்காணிப்பாளர் திலிப்குமார் ஸ்ரீவத்சவா, சில விஷமிகள் இறைச்சி கடைகளுக்கு தீ வைத்ததாகவும், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.