சென்னை,

சிகலா, டிடிவி தினகரரின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், அவர்களின் நண்பர்கள் மற்றும் ஜெயா டிவி அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை உள்பட 150க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில், தனது வீட்டில் கோ பூஜை நடத்தி வழிபாடு நடத்தினார் டிடிவி தினகரன்.

 

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சசிகலா, தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன் உள்ளிட்ட அனைவரது வீடு அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூர் டிடிவி ஆதரவாளர் புகழேந்தி இல்லம், கோடநாடு எஸ்டேட் உள்பட  கட்சிபிரமுகர்கள் வீடு அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டிடிவியின் அடையாறு இல்லத்திலும் சோதனை நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், அங்கு எந்தவித சோதனையும் நடைபெறவில்லை.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரெய்டு குறித்து அனைத்து ஊடகங்களும் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில், டிடிவி தினகரனோ அதைப்பற்றி கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல்,   சாதாரணமாக தனது மனைவி அனுராதா மற்றும் மகளுடன் கோபூஜை செய்து வழிபட்டார்.

இதை கண்ட அவரது ஆதரவாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

கோ பூஜை ஏன் செய்யப்படுகிறது?

கோ என்றால் உலகம். உலகில் உள்ள சகல ஜீவன்களுக்கும் தனது பாலை எடுத்துத் தரும் தாய் போல் விளங்குவதால் தான் அதை கோமாதா என்று அழைக்கிறோம்.

இவ்வளவு சக்தி உள்ள  பசுவை பூஜை செய்வதால் நமக்குப்பேறுகளும் திருமகள் பார்வையும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

கோமாதா பூஜை செய்வதால்,  துர்சக்திகள் வீட்டை நெருங்காது என்றும்,   சுப காரியங்கள் வீடு தேடி வரும். மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.