ஜெனிவா: புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ்க்கு ‘ஒமிக்ரான்’ என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

சீனாவின் வுகானில் இருந்து 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து பரவி வருகிறது. ஒவ்வொரு நாடுகளில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உருமாறி, பிறழ்வு வைரசாக மாற்றி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை தடுக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் சற்று கட்டுக்குள் உள்ள கொரோனா வைரஸ் தற்போது புதிய பிறழ்வாக மாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய B.1.1.529 பிறழ்வு வைரஸ், டெல்டா பிளஸ் தொற்றை விட தீவிரமானது என்றும் 50 பிறழ்வுகளை கொண்டது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், அதற்கு ஓமிக்ரான் (B.1.1.529) என்று பெயரிட்டுள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் கூட இந்த புதிய வைரஸ் தாக்கியுள்ளதால், இந்த வைரசின் வீரியம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில் பரவியுள்ளது  கண்டு பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,  இஸ்ரேல், ஹாங்காங், போட்ஸ்வானா, ஆகிய நாடுகளிலும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தென்னாப்பிரிக்கா உள்பட புதிய வகை தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளன.

அதிக கொரோனா பரவல் ஏற்படும் இடங்களை கட்டுப்படுத்த பகுதியாக தொடர வேண்டும். தீவிர கட்டுப்பாடு, கண்காணிப்பு தொடர வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.