புதுடெல்லி:

டெல்லி வசிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த நீதிபதி, தனது குடும்பத்துடன் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இதுகுறித்து சுகாதர துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், நீதிபதியின் வீட்டில் வேலை செய்த சமையல்காரருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்ச நீதிமன்ற நீதிபதியும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்கள் வழக்கு விசாரணையை வீட்டிலிருந்தே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணைகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டை, வெள்ளை சல்வார் கமீஸ் அல்லது வெள்ளை புடவை மற்றும் வெள்ளை கழுத்துப் பட்டையை அணிந்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த புதன் கிழமை தெரிவித்தது.

சில நாட்களுக்கு முன்பு, அபெக்ஸ் நீதிமன்ற ஊழியர்களுக்கு பதிவாளர்கள் 2 பேருக்கும் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.