பெங்களூரு: மருத்துவ படிப்புக்கு சேர்ந்த முதலாண்டு மாணவர்களுக்கான ‘பிரஷர்ஸ் டே’ கொண்டாட்டத்தினால், அதில் கலந்துகொண்ட மாணவர்களில்  182 மாணவர்களுக்கு கொரோனா பாசிடிவ் கண்டறியப்பட்டு உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்க்கக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பலர் அதை தவிர்க்கும் நிலையில், தொற்று பரவல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க வேண்டிய மருத்துவக்கல்லூரி மாணவர்கள், நடத்திய பிரஷர்ஸ் பார்ட்டியால் 182 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்த சோக சம்பவம், கர்நாடகமாநிலம் தர்வாத் பகுதியைச் சேர்ந்த எஸ்டிஎம் மெடிக்கல் காலேஜில் நடைபெற்றுள்ளது. அங்கு கடந்த 17 நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் பலர் அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்  182 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கல்லூரி கோவிட் ஹாட்ஸ்பாட் ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. இக்கல்லூரியின் இரண்டு விடுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரி நடத்திய பார்ட்டியில் ஆயிரம்பேர் வரை கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அனைவருக்கும் சோதனை நடத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இது மாநில மக்களிடையே  அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.