லண்டன்: இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் 77.8% பாதுகாப்பு அளிக்கிறது என லான்செட்  மருத்துவ இதழின் டைக்கால ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து, அதை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றன. அதுபோல, இந்தியாவில்  அரசு நிறுவனமான பாரத்பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற பெயரில் தடுப்பூசி தயாரித்து வருகிறது. அதுபோல புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா உதவியுடன் கோவாக்சின் தடுப்பூசி தயாரித்து வருகிறது. இந்த இரு தடுப்பூசிகளும், பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 110 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

இதற்கிடையில், இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்குவதில் இழுபறி நீடித்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் உலக சுகாதார நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து பல நாடுகள் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசி, கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக 77.8 சதவீத செயல்திறன் கொண்டிருப்பதாக ‘தி லான்செட்’ என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியானது  டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக ‘கோவேக்சின்’ தடுப்பூசி 65.2 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த தடுப்பூசியானது கடந்த 2020ம் ஆண்டு  நவம்பர் முதல் 2021ம் ஆண்டு மே மாதம் வரை 18-97 வயதுடைய 24,419 தன்னார்வலர்களுக்கு சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில், இறப்புகள் அல்லது பாதகமான நிகழ்வுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், முதல் டோஸ் போடப்பட்டு, 14 நாட்கள் கழித்து  2-வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டதில், கொரோனா தீவிரத்தன்மைக்கு எதிரான செயல்திறன் 77.8 சதவீதமாக இருந்தது. டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக 65.2 சதவீத செயல்திறன் கொண்டுள்ளது. இருந்தாலும் மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.