மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக பிவாண்டி நீதிமன்றத்தில் 2014 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

மகாராஷ்டிரா மாநில ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் ராஜேஷ் குண்டே தொடர்ந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி தான் உண்மைக்குப் புறம்பாகவும் தவறாகவும் எதுவும் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தார்.

ராகுல் காந்தியின் விளக்கத்தை அடுத்து 2018 ம் ஆண்டு அவர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்து விசாரணையை துவங்கியது மாஜிஸ்டிரேட் நீதிமன்றம்.

விசாரணை துவங்கியது முதல் ராஜேஷ் குண்டே சார்பில் வாய்தா வாங்கப்பட்ட நிலையில், வழக்கு தொடுத்தவரே வழக்கு விசாரணைக்கு தேவையான ஆதாரங்களை அளிக்க முன்வராததை சுட்டிக் காட்டிய நீதிமன்றம் ராஜேஷ் குண்டே அதற்கான ஆதாரங்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரையும், மும்பையைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவரையும் சாட்சியாக சேர்க்கச் சொல்லி ராஜேஷ் குண்டே தரப்பில் வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை முதலில் தாக்கல் செய்யுமாறும் சாட்சிகளை விசாரிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கலாம் என்று கூறினார்.

மேலும், இதுவரை வழக்குத் தேவையான ஆதாரங்கள் வழங்கப்படாத நிலையில், மே 10 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி ராஜேஷ் குண்டே குற்றம்சாட்டப்பட்ட ராகுல் காந்தி தரப்புக்கு ரூ. 1000 அபராதம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.