லக்னோ:

உ.பி. பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது என்று அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. பாஜக ஆட்சியில் கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் பிரகாஷ் ராஜ்பார் அமைச்சராக உள்ளார்.

இன்று அவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தற்போதைய ஆட்சியின் கீழ் எங்களது கட்சிக்கு மரியாதை கிடையாது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியுடன் ஒப்பிடுகையில் பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. அமைச்சரவையில் நான் பங்கு இடம்பெற்றிருந்தாலும் இது எங்களது அரசு கிடையாது. நாங்கள் பாஜக.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யாநத்துடன் பேசியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டுமா? வேண்டாமா என்பது பாஜக தான் முடிவு செய்ய வேண்டும். எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றால் நாங்கள் தனியாக போட்டியிடுவோம்”என்றார். உ.பி.யில் சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.