+2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பது குறித்து நாளை ஆலோசனை

Must read

சென்னை:
மிழகத்தில் +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிபிஎஸ்இ- யின் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (14/04/2021) நடைபெற்றது. இந்த ஆலோசனையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சிபிஎஸ்இ- யின் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில், “நாடு முழுவதும் மே 04- ஆம் தேதி முதல் ஜூன் 14- ஆம் தேதி வரை நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 4- ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த சிபிஎஸ்இ 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சூழல் பற்றி ஜூன் 1- ஆம் தேதி ஆய்வு நடத்தி, தேதி பின்னர் அறிவிக்கப்படும். 10- ஆம் வகுப்பு மதிப்பெண் எந்த வகையில் வழங்குவது என்பது பற்றி சிபிஎஸ்சி முடிவு செய்யும். மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்களுக்குத் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். தகுந்த சூழல் ஏற்படும் போது தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு வாய்ப்பு தரப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் “தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை (15/04/2021) ஆலோசனை நடத்துகிறார். அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசித்து முதல்வரிடம் முடிவு தெரிவிக்கப்படும். 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கலாமா, இல்லையா என்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார்” என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article